ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தீவிரவாதி சுட்டுக்கொலை!
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (13:01 IST)
ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி ஒருவன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
பாகிஸ்தானிற்கு ஆதரவான ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்திற்கு இச்சம்பவம் ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள பட்யாஸ் என்ற பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மறைவிடத்தில் யுனைட்டட் ஜிகாத் கவுன்சில் தீவிரவாதிகள் ரகசியக் கூட்டம் நடத்தியதைக் கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.
இதையடுத்து இருதரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் வெடித்தது. இதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதியான குலாம் ஹசன் வனி என்ற ஷமீம் தூல் சுடடுக்கொல்லப்பட்டான்.
அவனிடம் இருந்து கைத்துப்பாக்கி, செயற்கைக்கோள் தொலைபேசி, வயல்லெஸ் அமைப்புக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் மோதல் நீடித்து வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி ஷமீம் தூல், கடந்த 1992 ஆம் ஆண்டு தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தான். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் உள்ள முகாம்களில் பயிற்சி பெற்றுள்ளான். ஜம்மு- காஷ்மீரில் நீண்டகாலமாக இயங்கிவரும் மிகச்சில தீவிரவாதிகளில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.