மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்ட 9 ஆயிரம் வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
முன்பை விட வேகமாக புதிய வழக்குகளை மத்திய புலனாய்வு கழகம் (ம.பு.க.) விசாரணைக்கு ஏற்கும் நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் 8 ஆயிரத்து 688 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 244 வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ஒரு குற்றவாளி மட்டுமே தொடர்புடைய முன்னாள் ரயில்வே அமைச்சர் லலித் நரேன் கொலை வழக்கில் 33 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது.
ம.பு.க. நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின்படி, ஒட்டு மொத்த வழக்குகளில் 582 வழக்குகள் கடந்த 15-20 ஆண்டுகளாகவும், ஆயிரத்து 205 வழக்குகள் 10-15 ஆண்டுகளாகவும், 2 ஆயிரத்து 116 வழக்குகள் 5-10 ஆண்டுகளாகவும் நிலுவையில் உள்ளன.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 12 கற்பழிப்பு வழக்குகள், 2 சொத்து தகராறு வழக்குகள் உட்பட 64 வழக்குகளை ம.பு.க. பதிவுசெய்துள்ளது.
அதேமாத நிலவரப்படி, ம.பு.க. ஆயிரத்து 164 வழக்குகளை விசாரிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இது ஜனவரி மாதம் ஆயிரத்து 148 ஆக இருந்தது.