மணிசங்கர் அய்யர் துறை மாற்றம் : 7 புதியவர்கள் பொறுப்பேற்பு!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (13:21 IST)
மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரிடமிருந்த விளையாட்டு, இளைஞர் நலன் எம்.எஸ்.கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது பஞ்சாயத்து ராஜ், வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை நேற்று திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. ஆறு மத்திய அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், நேற்று இரவே 7 புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சரவை நேற்று திடீரென மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து 32 கேபினட் அமைச்சர்கள், 8 தனி பொறுப்பு அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் என மத்திய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
புதிய அமைச்சர்கள் விவரம்:
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில், புதுச்சேரி காங்கிரஸ் பேச்சாளர் நாராயணசாமி, ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தோஷ் பகோடியா, பீகாரைச் சேர்ந்த ரகுநாத் ஜா, ஜார்க்கண்டைச் சேர்ந்த ராமேஷ்வர் ஓரான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஜிதின் பிரசாத் ஆகிய ஏழு பேரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இதில் ரகுநாத் ஜாவை (ராஷ்டிரிய ஜனதா தளம்) தவிர மற்ற அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கும் இளைஞர்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மணிசங்கர் அய்யரிடமிருந்த விளையாட்டு, இளைஞர் நலன் ஆகியவை எம்.எஸ்.கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சரான ஜெய்ராம் ரமேஷுக்கு கூடுதலாக மின் துறை அளிக்கப்பட்டுள்ளது. ரசாயனம், உரம் அமைச்சர் பி.கே.ஹண்டிக்குக்கு கூடுதலாக சுரங்கத் துறை அளிக்கப்பட்டுள்ளது. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியிடம் இருந்த நாடாளுமன்ற விவகாரம் வயலார் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களின் துறை விவரம்:
1.எம்.எஸ்.கில் (விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் -தனி பொறுப்பு)
2. நாராயணசாமி (நாடாளுமன்ற விவகாரம், திட்டம்)
3. சந்தோஷ் பகோடியா (நிலக்கரி)
4. ரகுநாத் ஜா (கனரக தொழில்)
5. ராமேஷ்வர் ஓரான் (பழங்குடியினர் நலன்)
6. ஜோதிர் ஆதித்ய சிந்தியா (தகவல் தொழில் நுட்பம்)
7. ஜிதின் பிரசாத் (உருக்கு)
துறை மாற்றப்பட்ட அமைச்சர்கள் விவரம்:
கேபினட் அமைச்சர்கள்:
1.வயலார் ரவி (வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரம், நாடாளுமன்ற விவகாரம்- கூடுதல்)
2. பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி (தகவல் ஒளிபரப்பு)
3. மணி சங்கர் ஐயர் (பஞ்சாயத்து ராஜ், வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி)
இணை அமைச்சர்கள்:
1.பி.கே.ஹண்டிக் : ரசாயனம், உரம் மற்றும் சுரங்கம்
2. ஷகீல் அகமது : உள்துறை
3. பிரித்விராஜ் சவுகான் : பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன்
4. காந்தி சிங் : சுற்றுலா, கலாசாரம்
5. பி.கே.பன்சால் : நிதித்துறை, நாடாளுமன்ற விவகாரம்
6. ஜெய்ராம் ரமேஷ் : வர்த்தகம், மின்சாரம்
பதவி விலகிய அமைச்சர்கள்:
1. சுரேஷ் பச்சோரி (பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், நாடாளுமன்ற விவகாரம்)
2. எம்.வி.ராஜசேகரன் (திட்டம்)
3. தாசரி நாராயணராவ் (நிலக்கரி)
4. சுப்பராமி ரெட்டி (சுரங்கம்)
5. அகிலேஷ் தாஸ் (உருக்கு)
6. மாணிக்ராவ் கவிட் (உள்துறை)
மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதாக, இவர்கள் 6 பேரும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்தனர். அவற்றை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலுக்கு பிரதமர் அனுப்பி வைத்தார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்த பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராகவும், சுரேஷ் பச்சோரி மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த ராஜசேகரனின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.