மத்திய அமைச்சரவை இன்று மாலை மாற்றியமைக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு இதில் வாய்ப் பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவை இன்று மாலை மாற்றியமைக்கப்படுகிறது. 7 மணியளவில் குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சர்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராஜ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மற்றொரு முன்னாள் அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், ஜித்தேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது.
தற்போது மத்திய திட்டமிடுதல் மற்றும் அமலாக்கத் துறைக்கு தனிப் பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர் ஜி.கே.வாசன், கேபினட் அமைச்சராக உயர்த்தப்படுவார் என்று செய்திகள் கூறுகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு மேலும் ஒரு இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தயாநிதி மாறன் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள கேபினட் பொறுப்புக்கு முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி நியமிக்கப்படலாம் என்று அந்த செய்திகள் கூறுகின்றன.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதி மீண்டும் கூடவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை மாற்றத்தை செய்ய பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று காலை ஆலோசித்து முடிவெடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.