விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கோடி கடன்: சோனியா அறிவிப்பு!
ஞாயிறு, 6 ஏப்ரல் 2008 (12:02 IST)
இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்'' என்று காரைக்குடியில் பொது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடந்த விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், கோடிக்கணக்கான விவசாயிகள், ஏழை எளியோர்கள் தங்களது விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் உள்ளனர். வியாபாரிகளை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர்.
தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலையை இந்த அரசு அறியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு விவசாயிகள் கடன் 83 ஆயிரம் கோடியாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 2 லட்சத்து 40 ஆயிரம் விவசாய கடனாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
2004-ம் ஆண்டில் விவசாயிகளுக்கான கடன் வட்டி விகிதம் 10 விழுக்காடாக இருந்தது. அரசு பொறுப்பேற்ற பின்பு 9 விழுக்காடாக குறைக்கப்பட்டது. அதன் பின்பு 7 விழுக்காடாக குறைந்தது. தற்போது தமிழக அரசு அந்த வட்டி விகிதத்தை 4 விழுக்காடாக குறைத்து இருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றுபட்டால் காமராஜர் ஆட்சி!
பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை நடத்தி உள்ளார். அதுபோன்ற ஒரு பொற்கால ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நான் எனது கணவருடன் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைத்த பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அணை கட்டுகள் ஆகியவற்றை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். அதுபோன்ற சூழ்நிலை தமிழகத்தில் மீண்டும் வர நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு மக்களின் இதயங்களில் இடம் பிடித்து அவர்களுக்காக உழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சோனியா காந்தி கூறினார்.