மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியான போராட்டம்: பிரகாஷ் காரத்!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:58 IST)
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாதச் சக்திகளுக்கு எதிராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உறுதியான போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது அகில இந்திய மாநாடு கடந்த 29 ஆம் தேதி முதல் கோவையில் நடந்து வந்தது. மாநாட்டின் இறுதி நாளான இன்று கட்சியின் புதிய பொதுச் செயலராக பிரகாஷ் காரத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பிரதிநிதிகளிடையில் பேசுகையில், "பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து உறுதியாக நடத்த வேண்டும் என்று அகில இந்திய மாநாடு முடிவு செய்துள்ளது. இந்தச் சவாலைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
புனேவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது பற்றிக் கூறுகையில், "எங்கள் கட்சியை ஆர்.எஸ்.எஸ். எப்படி குறிவைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். எங்கள் அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன, ஆதரவாளர்கள் கொல்லப்படுகின்றனர். ஏனெனில், மதவாதத்தின் எல்லா வடிவங்களையும் உறுதியுடன் எதிர்க்கும் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. இந்த மதவாதச் சக்திகளுக்கு எதிராக எங்கள் ஒட்டுமொத்த கட்சியும் உறுதியுடன் போராட உள்ளது" என்றார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட காரத், "புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும். மக்களுக்கான மாற்றுக் கொள்கைகளை புதிய வடிவங்களில் உருவாக்க முயற்சிப்போம்" என்றார்.
அயலுறவுக் கொள்கைகள் பற்றிப் பேசுகையில், "மத்தியில் ஆள்வது யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக இந்தியா மாற இந்நாட்டின் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் அமெரிக்கக் கொள்கைகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான போராட்டங்கள் பற்றி கட்சியின் தலைமை உறுதியுடன் திட்டமிடும்" என்றார் காரத்.
"தற்போதுள்ள நிலப் பிரபுத்துவ ஆட்சி முறைக்கு மாற்றாக ஒரு ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்ட காரத். "இடதுசாரிகள் மற்றும் ஜனநாயகச் சக்திகள் அடங்கிய ஒரு மாற்று ஆட்சிமுறையை கொண்டுவருவதற்கான ஒரு அகில இந்திய இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிடும்.
இதற்கிடையில், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய அரசியல் சக்திகள் தலைமையிலான ஆட்சியில் இருந்து வேறுபட்ட அரசியல் தளத்தை மக்களுக்கு வழங்கக் கூடிய ஒரு மூன்றாவது அணியை உடனடியாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.