விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை கண்துடைப்பே என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அமைச்சரவையின் விலை கண்காணிப்பு குழு எடுத்துள்ள நடவடிக்கை வெறும் கண்துடைப்பே என்று புது டெல்லியில் நேற்று பா.ஜ செய்தி தொடர்பாளர் ராஜூவ் பிரதாப் ரூடி கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, மத்திய அரசு வெளியிடும் மொத்த விலை குறியீட்டு அட்டவணையை விட, உண்மையான விலை இரு மடங்கு உள்ளது. இந்த மலை போல் உள்ள பிரச்சனையை சில இறக்குமதி வரியை குறைப்பதால் தீர்த்துவிட முடியாது.
பணவீக்கத்தை தடுக்க நீண்ட கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள நெருக்கடிக்கு காரணம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கையின் விளைவே. அரசு உலக அளவில் விலை அதிகரித்துள்ளதால் பணவீக்கம் அதிகமாகின்றது என்றும், இதிலிருந்து இந்தியா காத்துக் கொள்ள முடியாது என அரசு கூறும் காரணம் ஏற்றுக் கொள்ள முடியாது.
மத்திய அமைச்சரவையின் விலை கண்காணிப்பு குழுவின் கூட்டத்திற்கு அடுத்த நாள் சிமென்ட் விலை 50 கிலோ மூட்டைக்கு ரூ 7 அதிகரித்துள்ளது. அதேபோல் விமான பெட்ரோல் விலை 14 விழுக்காடு உயர்ந்துள்ளது. ரயில்வே அமைச்சகம் இரும்பு தாது போக்குவரத்து கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது. இதனால் இதன் விலை 5.6 விழுக்காடு அதிகரிக்கும்.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களை கூறுகின்றார்கள். சீனாவில் ஓலிம்பிக் போட்டி நடப்பதால், இந்தியாவில் உருக்கு, இரும்பு, சிமென்ட் விலை அதிகரித்ததாக கூறுகின்றார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங் பொருட்களை பதுக்கியும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதால் விலைகள் அதிகரித்து உள்ளதாக கூறுகின்றார். இது மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் அறிவுக்கு ஒவ்வாத காரணங்களை கூறி, அவசரப்பட்டு பல முடிவுகளை எடுக்கின்றார்கள் என்று ராஜூவ் பிரதாப் ரூடி கூறினார்.