விலை நிச்சயம் குறையும் : மான்டெக் சிங் அலுவாலியா!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:52 IST)
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு துணிச்சலாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பணவீக்கம் நிச்சயமாக குறையும் என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

உணவுப் பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலைகளும் கடந்த ஒரு மாதமாக கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்கம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 6.68 விழுக்காடாக அதிகரித்து விட்டது.

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு சில வகை சமையல் எண்ணெய், அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. அத்துடன் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரியை முழுமையாக நீக்கியுள்ளது.

அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரிகளையும் குறைத்துள்ளது.

மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் விலை குறைவதுடன், பணவீக்கமும் குறையும் என்று மான்டெக் சிங் அலுவாலியா கூறினார்.

டெல்லியின் நேற்று சேவைத் துறை தொடர்பான உயர் நிலை குழுவின் அறிக்கை வெளியிடும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மான்டெக் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இப்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் பணவீக்கம் நிச்சயமாக குறையும். அரசு எடுத்த நடவடிக்கையால் சமையல் எண்ணெய் விலைகள் குறைய துவங்கியுள்ளன. விலை உயர்வை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் மட்டும் பணவீக்கம் அதிகரிக்கவில்லை. மற்ற நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் மட்டும் உள்ள பிரச்சனையல்ல. ஒவ்வொரு நாடும் பணவீக்க ஆபத்தை எதிர் கொண்டுள்ளது. சீனாவில் பணவீக்கம 9 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்து விட்டது. இது உலகளாவிய பிரச்சனை, ஒரு நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல என்பதை நாம் உணரவேண்டும். பணவீக்க்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதை நிதி அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறத” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்