சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தை திருத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (12:34 IST)
சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோவையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாட்டின் 5-ம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியதாவது:
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சரியில்லை என்றால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 356, மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் மத்திய அரசு படைகளை அனுப்பும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 355 ஆகிய இரண்டு சட்டப்பிரிவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் பஞ்சாயத்துகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஏற்றுமதி மற்றும் அயல்நாட்டு தொழில்நுட்பம் கடைப்பிடிக்கப்படும் தொழில்களுக்கு மட்டும் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் விளையும் காய்கறிகளை விற்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுமதி அளிக்க கூடாது. இதனால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு இதனை சீரமைக்க வேண்டும். இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.