இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் ரூ.8.05 லட்சம் கோடி!
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (13:07 IST)
கடந்த டிசம்பர் வரை இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் ரூ.8 லட்சத்து ஐந்தாயிரத்து 600 கோடியாக (201.4 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2007 வரை 169.7 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் அயல்நாட்டுக் கடன் 9 மாதத்திற்குள் ரூ.31.8 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு சராசரியாக 10.3 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வால் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 6 பில்லியன் டாலர் கடன் அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த அயல்நாட்டுக் கடனில் அரசின் பங்கு 53 பில்லியன் டாலராகவும் (26.3 விழுக்காடு), தனியார் கடன் 148.5 பில்லியன் டாலராகவும் (73.7 விழுக்காடு) உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் அயல்நாட்டுக் கடனில் அமெரிக்க டாலர் பங்கு கணிசமாக அதிகரித்து வருகிறது. இது மார்ச் 2007-ல் 52 விழுக்காட்டில் இருந்து டிசம்பருக்குள் 54.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது.