அணு, உயிரி, கதிர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை தயாராகிறது: பிரதமர்!

திங்கள், 31 மார்ச் 2008 (20:48 IST)
அணு, உயிரி, கதிர்வீச்சு உள்ளிட்ட எப்படிப்பட்ட அச்சுறுத்தலாயினும் அதனை எதிர்கொள்ள மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படை (Special Protection Group) தயாராகி வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிரதமர், குடியரசுத் தலைவர்களைக் காப்பது உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் 23வது நிறுவன நாளான இன்று, தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “ரசாயன, உயிரி, கதிர்வீச்சு, அணு போன்றவற்றை பயன்படுத்தி ஏற்படுத்தக்கூடிய எப்படிபட்ட அச்சறுத்தலையும் எதிர்கொள்ள சிறப்புப் பாதுகாப்புப் படை தயாராகி வருகிறது” என்று கூறினார்.

சிறப்புப் பாதுகாப்புப் படையையும், அதன் வீரர்களையும் திறன் ரீதியாக மேம்படுத்தத் தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் கூறினார்.

சிறப்புப் பாதுகாப்புப் படையின் மேம்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் தொடர்பான பட்டியலை இந்நிகழ்ச்சியில் பிரதமர் படித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்