அத்தியாவசிய பொருட்கள் வரி குறைக்கப்படும்: கமல்நாத்!

திங்கள், 31 மார்ச் 2008 (16:12 IST)
விலைவாசி உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிவரியை அரசு மேலும் குறைப்பது பற்றி ஆலோசித்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகை‌யி‌ல், சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் அதிகரித்து உள்ளன. இதனை சரிக்கட்ட இறக்குமதி வரியை மாற்றியமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்க இன்று மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் கமல்நாத், அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி பற்றி தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்திய அரசு ஏற்கனவே பாமாயில் உட்பட சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை 45 விழுக்காட்டில் இருந்து 20 விழுக்காடாக குறைத்தது. அத்துடன் உருக்கு, இரசாயபொருட்கள் உட்பட 40 முதல் 50 பொருட்களுக்கு அளித்து வந்த ஏற்றுமதி வரி சலுகையை மத்திய அரசு ரத்து செய்தது. பாசுமதி அல்லாத மற்ற வகை அரிசி, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்