மக்களவைத் தேர்தலுக்குள் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை: பரதன்!
வெள்ளி, 28 மார்ச் 2008 (15:54 IST)
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
தற்போது மாநிலங்கள் அளவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
ஆந்திரப் பிரதேச பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் பங்கேற்றுப் பேசுகையில் மூன்றாவது அணி முயற்சிகள் பற்றிக் கூறியதாவது:
மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களின் அடிப்படையில் மூன்றாவது அரசியல் அணி அமைக்க வேண்டும் என்பது எங்களின் நீண்டகாலத் திட்டமாகும்.
ஆனால் தற்போதைய சூழலில், தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு மாற்றாக மூன்றாவது அணி மிக விரைவில் அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு.
2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் அப்படி ஒரு அணி அமையுமானால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.
அப்படி இல்லை என்றால், அந்தந்த மாநிலங்களில் நிலவும் அரசியலின் அடிப்படையில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சிப்போம்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் தேனிலவு கொண்டாட எங்களுக்கு ஒன்றுமில்லை.
மக்களுக்காக ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்சப் பொதுச்செயல் திட்டத்தின் அடிப்படையில் அரசிற்கு நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையுடன் ஆதரவளித்து வருகிறோம் அவ்வளவுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நடந்த சந்திப்பில், மூன்றாவது அணி பற்றி விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, "தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் எதையும் பேசவில்லை. விவசாயிகள் விவகாரம், விலைவாசி உயர்வு போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் இணைந்து போராடுவது பற்றி மட்டும்தான் விவாதித்தோம்" என்றார் பரதன்.