தர்மசாலாவில் சீனப் பொருட்கள் எதிர்ப்புப் போராட்டம்!
புதன், 26 மார்ச் 2008 (16:32 IST)
தர்மசாலாவில் தங்கியுள்ள திபெத் அகதிகள் தங்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
சீன அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் திபெத் அகதிகள், தர்மசாலாவில் இன்று சீனத் தயாரிப்புப் பொருட்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி பேரணி நடத்தினர்.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான செரிங், "திபெத்தில் மனித உரிமைகளுக்கு எதிரான சீனா மேற்கொண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டித்து சீனத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இப்பேரணியின் முடிவில், சீனாவில் தயாரிக்கப்பட்ட துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு சந்தைக்கு அருகில் குவித்துக் கொளுத்தினர்.
இந்தியப் பண்பாட்டிலும் வரலாற்றிலும் பெரும் பிணைப்பைக் கொண்டுள்ள திபெத்தியர்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களின் பொருட்களை நாம் புறக்கணித்துக் கொளுத்தியதைப்போல, சீனப் பொருட்களை எரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.