புதியதாக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் அரசுடன் இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ள அனைத்து விவாகரங்களின் மீதான பேச்சுக்களும் புதுப்பொலிவு பெறும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்த இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாஷிங்டனில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பாகிஸ்தானில் கிலானி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பேச்சுக்கள் புதுப்பொலிவு பெறும் என்று நம்புகிறேன். அந்நாட்டிற்கு கூடிய விரைவில் செல்ல விரும்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்.
முஷாரஃப் ஆட்சியை தொடர்ந்து இந்த புதிய அரசும் அமைதிக்கான முயற்சிகளை தொடரவேண்டும். அதிபர் முஷாரஃப் விட்ட இடத்தில் இருந்து நூலை புதிய அரசு பற்றிக்கொள்ளும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானில் எந்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அந்நாடு தொடர்பான இந்தியாவின் முக்கிய கொள்கைகள் தொடரும்" என்றார்.