புதுச்சேரி சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்ட தொடர் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் போபிந்தர் சிங் (பொறுப்பு) உரையாற்றுகிறார்.
26ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. 27ஆம் தேதி 2008-09ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முதலமைச்சருக்கு எதிராக 5 அமைச்சர்கள் செயல்படுவது, 2 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள விவகாரம் போன்றவை விசுவரூபம் எடுத்து உள்ளது.
ஊழல் வழக்கு உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. அமைச்சர்கள் மோதலால் நிர்வாகம் ஸ்தம்பித்து போய் இருப்பதாக தி.மு.க. குற்றம்சாற்றி இருந்தது.
அரசை கலைக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க.வும், அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுச்சேரி முன்னேற்ற காங்கிரசும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சட்டப் பேரவை நாளை கூடுகிறது.