மேகாலய முதல்வர் லபாங் பதவி விலகினார் : ஆட்சியை பிடிக்க சங்மா தீவிரம்!

புதன், 19 மார்ச் 2008 (12:43 IST)
பெரும்பான்மையை நிரூபிக்க இயலாத நிலையில், பதவி ஏற்ற 10 நாட்களில் மேகாலய முதலமைச்சர் டி.டி. லபாங் பதவி விலகினார்.

இ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் சமீபத்தில் நட‌ந்த சட்ட‌ப் பேரவை‌த் தேர்த‌லில் எந்த‌க் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ்க்கு 25 இடங்களும், தேசியவாத காங்கிரஸ்க்கு 14 இடங்களும், ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 11 இடங்களும் கிடைத்தன.

தனிப்பெரும் கட்சி என்ற முறையில் காங்கிரசை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்ததையடுத்து, கடந்த 10-ம் தேதி லபாங் மீண்டும் மேகாலாய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆனால், சட்ட‌ப் பேரவை‌யி‌ல் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த லபாங் தான் பதவி விலகப் போவதாக அறிவித்தார். இன்று காலை நடந்த காங்கிரஸ் சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

'காங்கிரஸ்க்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை, எனவே நான் பதவி விலகுகிறேன்' என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிய லபாங் அதற்கான கடிதத்தை முறைப்படி ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

இதையடுத்து, 'மேகாலயா முற்போக்கு கூட்டணி (எம்.பி.ஏ.) இன்று பிற்பகல் புதிய அரசு அமைக்க வலியுறுத்தும்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஏ. சங்மா தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆதரவுடன் போதிய பெரும்பான்மையை திரட்டியுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சங்மா இன்று மாலையில் மேகாலய மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்