கிசான் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய நிதி இணை அமைச்சர் பி.கே. பன்சால் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகள் வாங்கிய ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இன்று மாநிலங்களவையில், இந்த கடன் தள்ளுபடியில் கிசான் கடன் அட்டைகள் மூலம் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படுமா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது, மத்திய நிதி இணை அமைச்சர் பி.கே.பன்சால், மத்திய அரசு இது வரை தகுதிபெற்ற 7 கோடி விவசாயிகளுக்கும் 'கிசான் கடன் அட்டை' (கே.சி.சி.) வழங்கி உள்ளது. மீதம் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்பவர்கள், வருட வாடகை அடிப்படையில் விவசாயம் செய்பவர்கள், விளைச்சலை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் நிலத்தை குத்தகையாக பெற்ற விவசாயிகள் என எல்லா பிரிவு விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டை வழங்கப்படும். இது கூட்டுறவு வங்கி, ஊரக வளர்ச்சி வங்கி, வணிக வங்கிகளின் மூலம் வழங்கப்படும்.
2006-07 ம் நிதி ஆண்டில் 85 லட்சத்து 11 ஆயிரம் கிசான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.46.72 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை மூலம் குறித்த காலத்திற்குள், எவ்வித சிரமமின்றி கடன் வழங்கப்படுகிறது என்று பன்சால் கூறினார்.