இந்திய - ஆப்பிரிக்க மாநாடு 19-ல் துவக்கம்: 131 திட்டங்கள் மீது ஆலோசனை!
சனி, 15 மார்ச் 2008 (12:06 IST)
இந்திய- ஆப்பிரிக்க மூன்று நாள் மாநாடு டெல்லியில் வரும் 19ஆம் தேதி துவங்குகிறது. இதில் 10 பில்லியன் கோடி டாலர் மதிப்புள்ள 131 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்திய தொழிற் கூட்டமைப்பு, ஏற்றுமதி இறக்குமதி வங்கி, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம், அயலுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. தான்சானியா, கானா நாடுகளின் துணை குடியரசுத் தலைவர் உட்பட 37 ஆப்பிரிக்க அமைச்சர்கள், 925 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய முதலீட்டாளர்கள் 35 ஆப்பிரிக்க நாடுகளுடன் கலந்துறையாட உள்ள இந்த மாநாட்டில் தொழில்நுட்பம், விவசாயம், மனித வளம், சக்தி ஆகிய நான்கு முக்கிய கூறுகள் இதில் பிரதானப்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே இந்தியாவுடன் பல்வேறு முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவுக்கு கச்சா பெட்ரோலியம் இறக்குமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடாக நைஜீரியா விளங்குகிறது. சர்வதேச இறக்குமதியில் 6.9 பில்லியன் டாலர் மதிப்பில் 12.2 விழுக்காட்டினை இந்தியாவுக்கு இறக்குமதி செய்கிறது. அதேபோல் இந்தியாவுக்கு தங்கம் இறக்குமதி செய்வதில் தென் ஆப்பிரிக்கா நான்காவது இடத்தில் உள்ளது.
ஆப்பிரிக்க தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் சயமால் குப்தா கூறுகையில், 'இந்தியாவை விட, 11 மடங்கு நிலப்பரப்பளவை ஆப்பிரிக்கா கொண்டுள்ளது. இது, அந்தளவுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள வாய்ப்புகளை எடுத்து கூறுகிறது. இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். டாடா குழுமம் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், உணவு, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகிறது' என்றார்.
எத்தியோப்பியா போன்ற பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இரட்டை எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்று வருகின்றன. வறுமைக்கு முடிவு கட்டும் நிலையில் ஆப்பிரிக்கா உள்ளது' என்று இந்தியாவுக்கான எத்தியோப்பியா தூதர் கன்நெட் சிவொய்ட் கூறினார்.
இந்திய - ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒத்துழைப்பாக இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு மார்ச் 21ஆம் தேதி முடிவடைகிறது.