மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் கடத்தல்!
வியாழன், 13 மார்ச் 2008 (20:36 IST)
மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்களில் இருந்து நல்ல வேலை அல்லது திருமணம் போன்ற ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணகான குழந்தைகள் குறிப்பாக சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அரசு சாரா அமைப்புகள் குற்றம்சாற்றியுள்ளன.
தெற்கு, வடக்கு 24 பிரக்னாஸ், முர்ஷிதாபாத், கிழக்கு, மேற்கு மித்னாப்பூர், நாடியா, ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கடத்தப்பட்ட பெரும்பாலான சிறுமிகளை மும்பை, டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், ஜலன்தர், உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு சாரா அமைப்புகள் மீட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிறுமிகள் பாதுகாப்பற்ற பணிச்சூழல், குறைவான உணவு, பாலியல் தொந்தரவு போன்ற பல்வேறுப்பட்ட கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
'இந்த நிகழ்வுகள் நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. சன்டேஷ்கலி, பதர்பிரதிமா ஆகிய பகுதிகள் குழந்தைகள் காணாமல்போனவற்றில் பிரதான பகுதிகளாகும். பதர்பிரதிமா பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் காணமல்போன 71 குழந்தைகளில் 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சன்டேஷ்கலி பகுதியில் 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டிற்குள் 302 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதில் 30 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்' என்று 'மேற்கு வங்கத்தில் காணாமால்போன குழந்தைகள்' என்ற தலைப்பிலான ஆய்வு தெரிவிக்கிறது.