பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கு நாக்பூருக்கு மாற்றம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதன், 12 மார்ச் 2008 (20:13 IST)
பேராசிரியர் எச்.எஸ். சபர்வால் கொலை வழக்கை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நீதிமன்றத்தில் இருந்து மராட்டிய மாநிலம் நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மாதேவ் கல்லூரி வளாகத்திலேயே பேராசிரியர் சபர்வால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற அகில் பாரதீவித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் அமைப்பின் தலைவர்கள் ராஜீவ் ரன்ஜன் அகேலா, விமல் டோமர் ஆகியோர் உட்பட எட்டு பேர் மீது கொலைக் குற்றம் சாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை உஜ்ஜய்ன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், 'இந்த வழக்கு தொடர்பான 51 சாட்சிகள் குற்றவாளிகளாலும், அம்மாநில காவல்துறையினராலும் பொய்சாட்சி கூறும்படி அச்சுறுத்தப்பட்டதால் எதிர்தரப்பிற்குச் சாதகமாக மாறிவிட்டதாகவும், எனவே இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கமாற்ற வேண்டும்' என்று கோரி பேராசிரியர் சபர்வாலின் மகன் ஹிமான்சு சபர்வாலஉச்ச நீதிமன்றத்தில் மனு தாக்க்கல் செய்தார்.

'விமல் டோமருக்கு மத்திய பிரதேச சிறையில் வி.ஐ.பி. அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டோமருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டபோது, முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் 30 நிமிடங்கள் அவருடன் இருந்தார். மத்திய பிரதேசத்தில் வழக்கு நடந்தால் பா.ஜ.க. தனது செல்வாக்கை பயன்படுத்தி தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும்' என்று தனது மனுவில் ஹிமான்சு சபர்வால் கூறியிருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரிஜித் பசாயத், சதாசிவம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

”வழக்கு விசாரணையில் நீதிமன்றமும் பங்கேற்க வேண்டும், சாட்சிகள் சொல்லுவதையெல்லாம் பதிவு செய்து கொள்ளும் டேப் ரிக்கார்டராக இருக்கக்கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள் மற்றும் விவரங்களைத் திரட்டுவதில் அரசு வழக்கறிஞருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 311ம், 165ம் ஏராளமான அதிகாரங்களை அளித்துள்ளன” என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கில் ஆஜராகும் அரசு தரப்பு வழக்கறிஞரின் செலவுகளை மத்திய பிரதேச அரசே ஏற்கவேண்டும் என்றும், வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை மராட்டிய மாநிலம் நாக்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்