ஊழியர்கள் போராட்டத்தால் விமான சேவையில் பாதிப்பு இல்லை!
புதன், 12 மார்ச் 2008 (12:52 IST)
நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத், பெங்களூரு ஆகிய பகுதிகளில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதை அடுத்து, பழைய விமான நிலையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய விமானநிலைய அதிகாரிகள் கூட்டமைப்பு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் நேற்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
இதனால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் விமான போக்குவரத்து சுமூகமடைந்துள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் எஸ்மா சட்டம் பிறக்கப்பட்டதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை. டெல்லியில் இருந்து 85 சர்வதேச, உள்நாட்டு விமானங்கள் வழக்கம்போல் புறப்பட்டு சென்றன.
இது குறித்து ஜி.எம்.ஆர். டெல்லி சர்வதேச விமான நிலைய (டயல்) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளுக்கும் போதிய ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
மேலும், 21 முக்கிய விமான நிலையங்களில் 479 விமானப்படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கொல்கத்தா, மும்பை, கேரளா, சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் உள்ள விமான நிலையங்களும் விமான சேவை சுமூகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.