இந்தியா - பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி அடுத்தமாதம் இந்தியா வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இந்த ஒப்பந்தத்தால் தொழிலாளர் நலம் மீதான இருநாட்டு நல்லுறவும் வலுப்படும்' என்று இந்திய தூதரக அதிகாரி பாலகிருஷ்ண செட்டியிடம் அமைச்சர் அலாவி கூறியதாக பஹ்ரைன் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்திய, பஹ்ரைன் நாடுகளுக்கு இடையே வரலாற்று ரீதியிலும், பண்பாட்டு ரீதியிலும் உள்ள வலிமையான நல்லுறவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அலாவி கூறினார்.
கடந்த ஜனவரியில் அபுதாபியில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் அலாவியைச் சந்தித்த இந்திய அயல்நாடுவாழ் இந்தியர்கள் நல அமைச்சர் வயலார் ரவி, மற்ற அரபு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிலாளர் நல புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்று பஹ்ரைனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தூதரக அதிகாரி பாலகிருஷ்ண ஷெட்டி கூறுகையில், பஹ்ரைனில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நல்வாழ்விற்கான இந்த ஒப்பந்தம், இந்திய தொழிலாளர்களின் வருகையை மேலும் அதிகரிக்க உதவும். தொழிலாளர்கள் விஷயத்தில் அமைதியான போக்கு நிலவும். சரியான நபருக்கு, சரியான வேலை, சரியான ஊதியம் கிடைக்க இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், இருநாடுகளும் இணைந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தல், உரிய பயிற்சி அளித்தல் ஆகியவையும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்றார்.
முன்னதாக, பஹ்ரைனில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,481 (100 தினார்) ஆக நிர்ணயிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.