இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப் படுத்துவதை நோக்கி முன்னேறுமானால், அரசுக்கான ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெறும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் இதுதொடர்பாக அவர், பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அதன் நிலையில் உறுதியாக இருந்தால் ஆதரவை வாபஸ் பெறுவதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளுக்கு மொத்தம் 59 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐ.மு. கூட்டணி - இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை வரும் 15ம் தேதிக்குள் கூட்டுமாறு சிபிஎம் அரசுக்கு கெடு விதித்த மறுநாளே பரதன் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற தொனியில் பிரதமர், நாடாளுமன்றத்தில் பேசியது பாஜகவை வெளிப்படையாக ஆதரவு அளிக்கக் கோருவது போன்றதாகும் என்றும் ஏ.பி. பரதன் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை பொறுத்தவரை ஒருமித்த கருத்து இல்லை என்பது நாடாளுமன்ற விவாதத்தின் போதே தெரிய வந்ததாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.