மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த மாநிலத்திற்கு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மேகாலயா சட்டப் பேரவையில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை.
எல்லா தொகுதியின் வாக்குகளும் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தேசியவாதக் காங்கிரஸ் 14 இடங்களைப் பிடித்துள்ளது.
இது தவிர ஐக்கிய ஜனநாயகக் கட்சி 10 இடங்களிலும், பா.ஜ.க. 1 இடத்திலும், சிறு கட்சிகள், சுயேச்சைகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் மராட்டிய மாநிலத்தை போல், காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது காங்கிரஸ் கட்சி சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.