1 லட்சம் மக்களுக்கு 142 காவலர்கள்!

வெள்ளி, 7 மார்ச் 2008 (11:54 IST)
இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 142.69 காவலர்கள் மட்டுமே உள்ளனர் எ‌ன்று காவல்துறை ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த புள்ளி விவரம் 2006 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி மாத‌ம் முத‌ல் தே‌தி எடுக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

"பிற நாடுகளில் காவலர்கள் மக்கள் விகிதாச்சாரம் எப்படி உள்ளது என்ற தகவலை காவல்துறை ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், கொள்கை அலசல், பொதுமக்கள் நலன்களுக்கான ஐக்கிய நாடுகள் பிரிவு தயாரித்துள்ள அறிக்கை அதன் இணையதளத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் வெளியிடப்பட்டது.

இதன்படி இந்த விகிதம் இத்தாலி நாட்டில் 559, மெக்சிகோ-491.8, சவுதி அரேபியா- 386.5, பெல்ஜியம் - 357.5 என்ற அளவில் உள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி காவல்துறையும், சட்டம் ஒழுங்கும் மாநில அரசின் பட்டியலில் உள்ளன. காவல்துறையினரின் எண்ணிக்கையை தீர்மானிப்பது, காவல்படைகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பொறுப்புகள் மாநில அரசுகளைச் சார்ந்தவை.

எனினும், காவல்துறையில் தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புமாறும், முக்கிய காவல்துறை கடமைகள் அல்லாத விடயங்களை தனியாரிடம் விடுமாறும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி வருகிறது" எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்