வாஜ்பாயைப் பாராட்டிய மன்மோகன் சிங்!
புதன், 5 மார்ச் 2008 (16:13 IST)
பாகிஸ்தானுடன் அமைதியை மேம்படுத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தீரமான முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டினார்.
மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப்பும் நமது பிரதமராக அடல் பிகாரி வாஜ்பாயும் இருந்தபோது இருநாடுகளுக்கும் இடையில் அமைதியைக் கட்ட கடுமையான தீரமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.
அதேநேரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, பெனாசிர் புட்டோ காலத்தில்தான் அமைதி முயற்சிகள் துவங்கப்பட்டன என்பதைக் குறிப்பிட்ட மன்மோகன் சிங், அந்த முயற்சிகள் தற்போது பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பதவியேற்ற பிறகும் தொடருவதாகக் கூறினார்.
பாகிஸ்தானுடன் நல்லுறவு!
பாகிஸ்தானில் அமையவுள்ள புதிய அரசுடன் நல்லுறவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், "பாகிஸ்தானுடன் அமைதியாக இருக்க இந்தியா விரும்புகிறது. நமது இரு நாடுகளின் எதிர்காலமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. நமது இறந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது" என்றார்.
மேலும், "இரு நாடுகளின் ஒன்றுபட்ட எதிர்காலம், ஒன்றுபட்ட பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது" என்றும் மன்மோகன் சிங் கூறினார்.