அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய அரசிற்கு இடதுசாரிகள் எச்சரிக்கை!
திங்கள், 3 மார்ச் 2008 (17:48 IST)
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஹைட் சட்டம் இந்தியாவை பாதிக்காது என்று மத்திய அரசு கூறியுள்ள விளக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இடதுசாரிகள், ஒப்பந்தம் நிறைவேறுமானால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹைட் சட்டத்தின் கூறுகள் இந்தியாவை பாதிக்காது என்று மத்திய அரசு கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்... அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு கண்டிப்பாகத் தொடரும் என்று நாங்கள் நினைக்கவில்லை" என்றார்.
"அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற விரும்பும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சிற்கு ஹைட் சட்டம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகள் இந்தியாவின் சுதந்திரமான அயலுறவுக் கொள்கைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ராணுவம், பாதுகாப்புத் துறைகளில் அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியாவை மாற்றும் வகையில் ஹைட் கட்டத்தின் கூறுகள் அமைந்துள்ளன" என்றும் யச்சூரி கூறினார்.
இதே கருத்தை பிரதிபலித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, "இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிக்குமானால், எங்கள் முடிவை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அது அரசிற்கும் தெரியும்" என்றார்.
முன்னதாக, மக்களவையில் இன்று அயலுறவுக் கொள்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த அறிக்கையில், இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் அரசியல் நிர்வாக அமைப்புகளுக்கு அனுமதியளிக்கும் சாவி தான் ஹைட் சட்டமே தவிர அதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.