அணுசக்தி முகமையுடன் பேச்சு விரைவில் முடிந்துவிடும்: அனில் ககோட்கர்!
புதன், 27 பிப்ரவரி 2008 (16:47 IST)
இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ) நடந்துவரும் பேச்சுக்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அவை இந்தியாவின் நலன்களுக்கு உட்பட்டு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்றும் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அணுசக்தி விவகாரத்தில் நிறையச் சிக்கல்கள் இருப்பதாகவும், அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகத் தீர்க்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
வியன்னாவில் நேற்றுச் சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா நடத்திய பேச்சுக்களின் முன்னேற்றம் பற்றிக் கேட்டதற்கு, விவாதங்கள் நல்லமுறையில் நடந்ததாகவும், சில கடினமான சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார் ககோட்கர்.
பேச்சுக்கள் எப்போது முற்றுப்பெறும் என்று கேட்டதற்கு, ''எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக பேச்சுகளை இறுதி செய்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்னதாக இந்தியாவின் நலன்களும் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்'' என்றார் அவர்.
தங்கள் நாட்டில் அதிபர் தேர்தல் முடிவதற்குள் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது பற்றிக் கேட்டதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார் ககோட்கர்.
''நான் ஒரு தொழில்நுட்ப நிபுணர். எனவே அதுபற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை'' என்றார் அவர்.