நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், முதலில் பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இன்று காலை மக்களவை கூடியதும், தேசிய ஜனநாயக கூட்டணி, 3வது அணியை சேர்ந்த உறுப்பினர்கள் விவசாயிகள் தற்கொலை, கடன் பிரச்சனையை எழுப்பினர். மேலும், கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, ஒத்தி வைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. விவசாயிகளுக்கு எதிரான அரசின் கொள்கைகளை கண்டிப்பதாகவும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் நிலவியதால், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நண்பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் இதே பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரையும் பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று மக்களவையில் இரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இரயில்வே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் இதே பிரச்சனையில் அமளியில் ஈடுபட்டதால், இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.