விலைவாசி கட்டுக்குள் வைக்கப்படும் : குடியரசுத் தலைவர் உரை!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (13:41 IST)
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு அளவிற்கு நிலை நிறுத்தப்படும் அதே வேளையில், விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறினார்!
நிதிநிலை அறிக்கை தொடரின் துவக்க நாளான இன்று நாடாளுமனற் மைய மண்டபத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதீபா பாட்டீல், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை உரிய வகையில் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம்!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களைத் தழுவியதாகவும், அனைத்து மண்டலங்களும் சரிசமமான முன்னேற்றத்தைப் பெறும் அளவிற்கும், சுற்றுச்சூழல் வளத்தைக் காப்பதாகவும் இருக்கும் என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நான்கு ஆண்டுக்கால செயல்பாடுகளை பட்டியலிட்டுப் பேசிய பிரதீபா பாட்டீல், நாட்டின் சமூக அமைதியும், ஒற்றுமையும் பாதுகாக்கப்படும் என்றும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் கூறினார்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்!
இதுவரை உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், அதைப்போன்று இரண்டு மடங்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.