முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு இம்மாதம் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியில் பேசித் தீர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள அரசு கூறியுள்ளது.
இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், "முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அதன் நிலை எப்போது மேலும் மோசமடையும் என்று யாராலும் உறுதி கூற முடியாது. அணை பலவீனமான உள்ளதை உறுதிப்படுத்துவதற்கான 35 விதமான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்" என்றார்.
மேலும்," முல்லைப் பெரியாறு பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியில் அணுகுவதன் மூலம் விரைவில் தீர்வுகாண முடியும். நிபந்தனைகள், நீர்ப்பங்கீடு உள்ளிட்ட எல்லா அம்சங்கள் தொடர்பாகவும் பேசித் தீர்வு காண்பதற்கு கேரள அரசு தயாராக உள்ளது" என்றும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக, கேரள சட்டப் பேரவையில் நிதிநிலை கூட்டத் தொடரின் துவக்க நாளில், பேரவையில் அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.எல். பாட்டியா, "பலவீனமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணையினால் ஏற்படக்கூடிய பிரச்சனைக்குத் தீர்வாக புதிய அணை கட்டப்படும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்றும், அதன் நீர்த்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும், அணை பலவீனமாக உள்ளது என்று தொடர்ந்து கூறிவரும் கேரள அரசு, தற்பொழுது அதற்கு மாற்றாக புதிய அணை கட்டுவதை வலியுறுத்தி வருகிறது.