சவப்பெட்டி ஊழல் வழக்கு: ம.பு.க.விற்கு 4 வாரம் கெடு - உச்ச நீதிமன்றம்!
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:03 IST)
கார்கில் போரில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துவர சவப்பெட்டிகள் வாங்கியதில் ரூ.2,000 கோடி வரை நடந்த ஊழலில் தொடர்புடைய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான நடுநிலை அறிவுரையாளர் ராகேஷ் திவேதி, சவப்பெட்டி ஊழலில் தொடர்புடைய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்தியப் புலனாய்வுக் கழகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் மிலன் கே பானர்ஜி, இவ்வழக்கில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் 35 வழக்குகளைப் புதிவு செய்துள்ளதாகவும், இதில் 19 வழக்குகளில் அடிப்படை ஆதாரங்கள் எதையும் சேகரிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக ம.பு.க. எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சவப்பெட்டி ஊழல் வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் மீதும் குற்றம்சாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.