இது குறித்து ரயில்வேத் துறை இணையமைச்சர் வேலு கூறுகையில், 2-ம் வகுப்புப் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவை உயர வாய்ப்பில்லை என்றும், ஏ.சி.முதல் வகுப்பு, ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டணங்கள் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ரயில்களில் இட நெருக்கடியை குறைக்கும் வகையில் கூடுதலாக ஜன்னல் ஓர படுக்கை வசதிகள் அறிமுகம் செய்யப்படும். இது தவிர, பீகார் உள்பட வட மாநிலங்களை இணைக்கும் வகையிலும், தென் மாநிலங்களிலும் புதிய ரயில்கள் விடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, மும்பை உள்பட பெரு நகரங்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் ஏற்படுவதால் கூடுதல் ரயில்கள் இயக்குவது, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகும்" என்றனர்.
மேலும், சதாப்தி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இணைய தள, செயற்கைக் கோள் தொலைக்காட்சி வசதிகள், பயணச்சீட்டு பெறுவதற்குப் புதிய நவீன முறைகள் உள்ளிட்டவற்றிற்கான அறிவிப்புகளும் வெளியாகின்றன.