முறைபடுத்தப்படாத நிறுவனங்களுக்கு தேசிய நிதியம்!
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (14:01 IST)
நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு 32 விழுக்காடு அளவு பங்களிப்புக்கு வகை செய்யும் முறைபடுத்தப்படாத நிறுவனங்களின் நிதிச் சிக்கலை தீர்க்க உதவும் வகையில் தேசிய நிதியத்தை உருவாக்க மத்திய அரசுக்கு, நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்த ஆணையத்தின் தலைவர் அர்ஜூன் கே. சென்குப்தா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா வங்கி நிறுவனரின் நினைவாக வங்கி தொடங்கப்பட்ட நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பேசிய நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் அர்ஜூன் கே. சென்குப்தா, கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் முறைப்படுத்தப்படாத அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு தேசிய நிதியம் ஒன்றை உருவாக்க தமது தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
முறைப்படுத்தப்படாத அமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் 94 விழுக்காட்டு உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இந்த வகையான நிறுவனங்களில்தான் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உள்ள முறைப் படுத்தப்பட்ட அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு உட்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் விகிதாச்சாரம் மொத்த உழைக்கும் மக்களில் 6 முதல் 7 விழுக்காட்டினர் அளவுக்குத்தான் உள்ளதாகவும் அர்ஜூன் கே. சென்குப்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32 விழுக்காடு அளவுக்கு இந்த துறையின் பங்களிப்பு உள்ள நிலையில், பொருளாதார அடிப்படையில் இத்துறை மேம்பட மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்க முன்வர வேண்டும் என்றும் அர்ஜூன் கே. சென்குப்தா வலியுறுத்தியுள்ளார்.