பாக். சிறையில் அடைபட்டுள்ள இந்தியர்கள் வழக்கு : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வார கெடு!
திங்கள், 18 பிப்ரவரி 2008 (20:00 IST)
எந்தவித விசாரணையும் இன்றி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் பாகிஸ்தான் சிறையில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டு உள்ள இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எல்லைப் பகுதியில் வழி தெரியாமல் நுழைந்த கோபால் தாஸ் என்பவர் பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வேவு பார்த்தல் குற்றச்சாற்று சுமத்தப்பட்டு, கடந்த 1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானின் ஷியால்கோட் கண்டோன்ட்மெண்டில் உள்ள இராணுவ நீதிமன்ற உத்தரவின் பேரில், கோபால்தாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இதுவரை, பாகிஸ்தான் அரசு அவர் மீது எந்த வித குற்றச்சாற்றையும் நிரூபிக்காமலும், விசாரணை எதுவும் இல்லாமலும் சட்ட விரோதமாக அவரை சிறை வைத்துள்ளது. தனது சகோதரர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள கோபால்தாஸ், தன்னைப் போலவே 182 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் துயரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மனுதாரர் இந்திய அரசு உள்ளிட்ட பல அரசு அமைப்புகளைத் தொடர்பு கொண்டும் சம்மந்தப்பட்ட யாரையும் தொடர்பு கொள்ள இயலாத நிலையில்தான் இருந்துள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்,நீதிபதி ஆர்.பி. இரவீந்திரன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, கோபால் தாஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் சிறையில் நீண்ட காலமாக எந்த விதமான விசாரணையும், குற்றச்சாற்றும் இன்றி அடைக்கப்பட்டு உள்ளவர்களை பாதுகாப்பாக விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
மனுதாரர் கடந்த ஆண்ட அக்டோபர் 15 ஆம் தேதி தம்மை விடுவிக்க கோருவது தொடர்பாக இந்திய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை சிறைவைத்து இருப்பது அடிப்படை உரிமைகளுக்கும், வாழும் உரிமையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று மனுதாரரின் சகோதரர் ஆனந்த் வீர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கோபால்தாஸை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் பாகிஸ்தானின் மியான்வாலி சிறையில் இருந்து விடுவிக்கப்படும் கோபால்தாஸை பாதுகாப்புடன் அழைத்துக் கொள்வது தொடர்பாக இந்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்து உள்ளார்.மேலும் கோபால்தாஸின் விடுதலை தூதரகம் மூலமாக நடந்தால் தான் அவரது உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் மனுதாரர் தமது மனுவில் கூறியுள்ளார்.