தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எதுவும் உள்ளதாக என்ற கேள்விக்கு, அது குறித்துத் தற்போது எதுவும் கூற முடியாது என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் நழுவலாகப் பதிலளித்தார்.
இது குறித்து டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தேசிய அளவில் சில பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நடவடிக்கை ஏடுத்து வருகிறது. அதில் அ.இ.அ.தி.மு.க.வும் இடம்பெறுமா என்பதைப் பற்றி தற்போது எதுவும் கூற இயலாது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தெலுங்கு தேசம் கட்சியும் இந்திய தேசிய லோக்தளமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டன. எனினும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் மட்டும் பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது.
அடுத்த மக்களவைத் தேர்தலின்போது, தேசிய அளவில் மேலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவற்றின் பெயர்களை தற்போது வெளியிட இயலாது.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடந்த உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் மாயாவதியுடன் கூட்டு வைத்ததால் பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதுடன், குறைந்த இடங்களையே பெற முடிந்தது. எனவே உ.பி.யில் இனிவரும் தேர்தலில் பா.ஜ.க. தனித்தே போட்டியிடும்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானி அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுக்காலம் அவர் பதவி வகித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான வகையில் அவர் செயல்பட்டுள்ளார். எனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறும் அனைத்துக் கட்சிகளும் அத்வானியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது.