பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: இடதுசாரிகள்!
வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:49 IST)
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க வேண்டுமே தவிர, சாமானிய மக்களின் மீது சுமையைத் திணிக்கும் விதமாகப் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தக் கூடாது என்ற தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இடதுசாரிகள், இதனைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
"மத்திய அரசின் முடிவினால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்" என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி.
ஏற்கெனவே, "பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பை முறைப்படுத்துவதன் மூலம், அவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து, பொது மக்களின் மீது சுமையை ஏற்றுவதைச் சகிக்க முடியாது" என்று அவர் எச்சரித்திருந்தார்.
இதேகருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட், ராஸ்ட்ரிய சமாஜ் கட்சி, ஃபாவர்ட் பிளாக் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் எதிரொலித்தன.
"மத்திய அரசின் இந்த முடிவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வினால் மேலும் பாதிக்கப்படுவார்கள்" என்ற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.