பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க தனி 'உதவிஎண்'!

திங்கள், 11 பிப்ரவரி 2008 (19:59 IST)
இனிமேல் பெண்களுக்கு எதிராக குற்றம் நடக்கும் இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாவருவார்கள் என்று நம்பலாம். ஏனென்றால் பெண்களின் உதவிக்காகவே '103' என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புத்தாண்டு தினத்தில் மும்பையில் அயல்நாடுவாழ் இந்திய பெண்களுக்கு நடந்த பாலியல் வ‌ன்முறை‌ச் சம்பவம் பெண்களுக்கான பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பெரும்பாலும், இதுபோன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின்போது காவல்துறையினருக்கஉடனடியாக தகவல் கிடைப்பதில்லை. அவ்வாறு தகவல் கிடைத்தாலும் காவல்துறையினர் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்பது வேறு கதை.

அவசர நேரத்தில் காவல்துறையை எந்த எண்ணில் தொடர்பு கொள்வது? என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனால், பெண்களின் அவசர உதவிக்காகவே தனி தொலைபேசி எண்ணமும்பை காவல்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

இதுகுறித்து காவல்துறை இணை அணையாளர் (சட்டம் ஒழுங்கு) பிரசாத் கூறுகையில், "கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே நகரில் பெண்களுக்கு எதிராக கொடுமைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனினும், சில முக்கிய சம்பவங்களின் போது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க இயலவில்லை. இந்த நிலையை மாற்ற, பெண்களுக்கு தனி தொலைபேசி உதவி எண்ணை அறிமுகப்படுத்த உள்ளோம். தங்களது செல்பேசியில் இருந்தும் '103' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணில் அழைப்பு வந்ததுமே கிடைக்கும் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பார்கள். சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று உரிய நடவடிக்கை எடுக்க இந்த எண் மிகவும் உதவியாக இருக்கும். முதலில் வீதி குற்றங்களை தடுக்கவே இந்த உதவி எண்ணை பயன்படுத்த திட்டமிட்டோம். தற்போது, எந்தவிதமான குற்றங்களையும் தெரிவிக்கும் வகையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உதவி எண் சிறப்பு பயிற்சி பெற்ற குழுவால் இயக்கப்படும். அழைப்பை ஏற்று வேகமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்படும். இதற்காக இரண்டு பெண்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிராக குற்றங்கள் நடந்தாலும் இந்த எண்ணை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பேரில் விரைவில் முடிவு செய்யப்படும்" என்றார்.

இந்த எண் வரும் 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்