பெட்ரோல் விலையேற்றம் குறைவாக இருக்கும்: முரளி தியோரா!
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (19:52 IST)
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் குறித்து அமைச்சர்கள் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளின் மீது மத்திய அமைச்சரவை எப்போது இறுதி முடிவு எடுக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, விலையேற்றமானது சாதாரண மக்களைப் பாதிக்காத வகையில் குறைவாக இருக்கும் என்றார்.
பெங்களூவில் காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த விவகாரத்தில் இடதுசாரிகள் தங்கள் நிலைபாட்டைக் கூறியுள்ளனரே தவிர, மத்திய அரசு முடிவெடுப்பதற்கு எந்தக் காலக் கெடுவையும் அவர்கள் நிர்ணயிக்கவில்லை. இருந்தாலும், விலையேற்றமானது சாதாரண மக்களைப் பாதிக்காத வகையில் குறைவாகவே இருக்கும்" என்றார்.
மேலும், "இந்தியா தன்னுடைய தேவையான 130 மில்லியன் டன் கச்சா எண்ணையில் 120 மில்லியன் டன்னை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணை இறக்குமதிக்குச் செலவிடும் தொகையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறிய தியோரா, "மண்ணெண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மானியம் வழங்கும் வகையில் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.72,000 கோடி இழப்பு ஏற்படுகிறது" என்று குறிப்பிட்டார்.
"நமது நாட்டில் இயற்கை எரிவாயுத் தட்டுப்பாடு எதுவுமில்லை, எரிவாயு நிரப்பும் உருளை தட்டுப்பாடுதான் உள்ளது. இது விரைவில் தீர்க்கப்பட்டுவிடும். மூன்று பொதுத் துறை நிறுவனங்களின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வினியோகிக்கப்படும் போது இச்சிக்கல் ஏற்படும்" என்றார் தியோரா.
எரிபொருள் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு வாகனங்களில் இயற்கை எரிவாயுப் பயன்பாடு (சி.என்.ஜி.) அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய தியோரா, டெல்லியில் சுமார் 70 விழுக்காடு வாகனங்கள் சி.என்.ஜி. பயன்பாட்டிற்கு மாறிவிட்டதாக குறிப்பிட்டார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை பற்றி முடிவெடுப்பதற்காக, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பலமுறை கூடி விவாதித்தது. இருந்தாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரையும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரையும் உயர்த்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேநேரத்தில், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் ஆகியோர் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும், விலை உயர்வுக்குப் பதிலாக வரிகளைக் குறைப்பது போன்ற மாற்று வழிகள் சிலவற்றை அமைச்சர்கள் முரளி தியோரா, பிரணாப் முகர்ஜி ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இதற்கு மற்ற அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு குழப்பமான சூழல் நிலவியதால், விலை உயர்வு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை மத்திய அமைச்சரவையிடம் ஒப்படைப்பதாக அமைச்சர்கள் குழு அறிவித்தது.