மும்பைக் கலவரம்: வட இந்தியத் தலைவர்கள் கடும் கண்டனம்!
வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:08 IST)
மும்பையில் குடியேறியுள்ள வட இந்தியர்களுக்கு எதிராக அங்கு நடந்துவரும் கலவரங்களுக்கு வட இந்தியாவில் பலம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வட இந்தியாவில் இருந்து மும்பையில் குடியேறியுள்ளவர்கள் மராட்டியர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து அவர்களைக் கொள்ளையடிப்பதாகவும், அதனால் வட இந்தியர்கள் அனைவரும் உடனடியாக மராட்டியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே போராட்டம் நடத்தி வருகிறார்.
இதனால், மும்பை உள்ளிட்ட மராட்டியத்தின் முக்கிய நகரங்களில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. வட இந்தியர்களின் சொத்துக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இதற்குப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெலுங்குதேசம் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மும்பையில் நடக்கும் சம்பவங்களைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, "மும்பையில் உள்ள வட இந்தியர்களின் வீடுகளைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளை ராஜ் தாக்ரே ஆதரவாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மராட்டியத்தில் வசிக்கக் கூடாது என்று நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
பா.ஜ.க.வினர் ஜம்முவில் ராஜ் தாக்ரேவின் உருவப் பொம்மைகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
லக்னோவில் ராஜ் தாக்ரேவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் முழக்கங்களை எழுப்பியதுடன், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். லூதியானாவில் சுமை தூக்கும் தொழிலாளர்களும், லாரி உரிமையாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.