பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒத்துழைப்பு: இந்தியா- மலேசியா உறுதி!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகளை இந்தியாவும், மலேசியாவும் ஆராய்ந்து வருகின்றன என்று ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கோலாலம்பூரில் தெரிவித்தார்.
நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் கடந்த மாத மலேசியப் பயணத்தின் தொடர்ச்சியாக, அங்கு சென்றுள்ள நமது ராணுவத் தளபதி தீபக் கபூர், அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதியைச் சந்தித்து, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பயங்கரவாத எதிர்ப்பு, அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகள், எல்லைப்புற நிர்வாகம், வல்லுநர்கள் பரிமாற்றம், கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட மலேசியா விருப்பம் தெரிவித்துள்ளது" என்றார்.
ராணுவத் தளவாடங்கள், வல்லுநர்கள் பரிமாற்றம் குறித்துக் கேட்டதற்கு, "இந்தியாவின் ராணுவம் மிக விரிந்தது. நமது திறனும் அதிகம். இதனால் நாம் சில விடயங்களில் அவர்களுக்கு உதவ முடியும். அவர்களிடமும் நாம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது" என்றார்.
பயங்கரவாதத்தை முறியடிக்கும் திட்டங்களில் தங்களின் எதிர்பார்ப்புகளை இந்தியா மலேசியாவிடம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்ட தீபக் கபூர், அதற்கு நேர்மறையான பதில்கள் வரப்பெற்று உள்ளதாகத் தெரிவித்தார்.
"பயங்கரவாதத்தை முறியடிக்கும் வழிகளை ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவருக்கும் கவலையளிக்கும் விடயமாகப் பயங்கரவாதம் உள்ளது. தற்போது துவங்கியுள்ள நான்காவது தலைமுறைப் போர் முறைகள் இன்னும் கவலை தருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.