அப்பாவி ஏழை தொழிலாளர்களின் சிறுநீரகத்தை திருடி அயல்நாடுகளுக்கு விற்ற கும்பலுக்கும், பல அரசியல் தலைவர்களுக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் குர்கான் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையை மையமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற கும்பலுக்கு 48 நாடுகளுடன் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுநீரக திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கனடாவை சேர்ந்தவர் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த கும்பலின் முக்கிய தலைவனான டாக்டர் அமித் குமார் தலைமறைவாகி உள்ள நிலையில், அவருக்கு உதவியாக செயல்பட்ட உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த டாக்டர் உபேந்திரா உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து உளவுத்துறை உயர் அதிகாரி பிரேம் பிரகாஷ் கூறுகையில், "முக்கிய குற்றவாளியான டாக்டர் அமித் குமாருக்கு ஹரியானா முன்னாள் துணை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு உள்ளது. மேலும், பல அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாகவும் டாக்டர் உபேந்திரா தெரிவித்துள்ளார். டாக்டர் அமித்குமாரின் உண்மையான பெயர் சந்தோஷ் ரவுத். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு பிறகு, கனடாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். அவர் மூலமாக அயல்நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்" என்றார்.
இந்நிலையில், அமித்குமாருக்கு உதவியாக செயல்பட்ட ஹரியானவை சேர்ந்த புல்புல் கட்டாரியா, செவிலியர் லிண்டா, ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணகுமார் அகர்வால் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.