பிப்ரவரி-4 முதல் எல்.ஐ.சி. ஹெல்த் ப்ளஸ் திட்டம் அறிமுகம்!
சனி, 2 பிப்ரவரி 2008 (16:20 IST)
எல்.ஐ.சி.ஹெல்த் ப்ளஸ் திட்டம் வரும் நான்காம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மண்டலங்களில் சென்னையைத் தலைமையிடமாக கொண்ட தென் மண்டலம் நடப்பு நிதியாண்டில் முதல் காப்புறுதித் தவணைத் தொகையாக ரூ.6,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 56 விழுக்காடு அதிக வளர்ச்சி என்றும் பி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வளர்ச்சி விகிதம் நடப்பாண்டில் 63 விழுக்காடாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 40.8 லட்சம் புதிய காப்புறுதி தவணைப் பத்திரங்கள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தென் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாகுளம் மண்டலம் ரூ.1,000 கோடி முதல் காப்புறுதி தவணை வருவாய் திரட்டியுள்ளது. இது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக வரலாற்றில் முதல்முறை என்றும் பி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள சங்கணாச்சேரி கிளை, எங்கள் நிறுவனத்தின் அனைத்து புதிய வணிக இலக்குகளையும் எட்டி சாதனை புரிந்துள்ளது என்றும்,கடந்த ஆண்டு 330 முகவர்களைக் கொண்டிருந்த இந்தக் கிளை நடப்பாண்டில் 1,500 முகவர்களை சேர்த்து எம்.டி.ஆர்.டி. க்கு தகுதி பெற்றுள்ளது. அதைப்போல தமிழகத்தின் சேலம் மாவட்டமும் கடந்த ஆண்டு 318 முகவர்கள் என்ற நிலையில் இருந்து தற்போது அதிக எம்.டி.ஆர்.டி. முகவர்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதல் நீண்ட கால உடல் நலம் தொடர்பான எல்.ஐ.சி. ஹெல்த் ப்ளஸ் திட்டம் வரும் நான்காம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் மருத்துவ சோதனைகள், அறுவைச் சிகிச்சைகளுக்கும் தேவையான பணம் கிடைக்க வழிவகுக்கும் என்றும், இத்திட்டத்தில் முதலீடு செய்த 3 ஆண்டுகள் கழித்து எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுபுவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.