தேர்தல் பிரச்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க.!
சனி, 2 பிப்ரவரி 2008 (12:47 IST)
'சங்கல்ப் யாத்ரா' பிரச்சார பயணத்தை முன்னிட்டு 'சங்கல்ப் சந்தேஷ் வாகன்ஸ்' என்ற பிரச்சார வாகனத்தை பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு 10 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. சமீபத்தில் குஜ்ராத், ஹிமாச்சல் பிரதேசச் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, சூட்டோடு சூடாக நாடு முழுவதிலும் பிரச்சார பயணம் மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அத்வானியை முன்னிறுத்தி இந்த பிரச்சாரம் துவக்கப்பட உள்ளது. 'சங்கல்ப் யாத்ரா' எனப்படும் இப்பிரச்சாரத்தை வரும் 6-ம் தேதி ஹோகல்பூரில் துவக்கி வைக்கும் கட்சி தலைவர் அத்வானி, நாடு முழுவதிலும் 380 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் செல்ல உள்ளார்.
"அத்வானி தலைமையில் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் 16 இடங்களில், தீவிரவாதம், விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகள் குறித்து சித்திரிக்கும் வகையில் வீதி நாடகங்கள் நடத்தப்படுவதுடன், 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்வி' என்ற தலைப்பில் குறும்படமும் திரையிடப்படும்" என்று கட்சி துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்