கல்வி உதவித்தொகை நிபந்தனையை நீக்கவேண்டும்: பஸ்வான்!
சனி, 2 பிப்ரவரி 2008 (11:33 IST)
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விதிக்கப்பட்ட நிபந்தனையை நீக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உயர்கல்வியில் சேரும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய சமூக நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான செயலாகும்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு மதிப்பெண் உச்சவரம்பை நீக்குவது தொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன். தமிழக அரசு, மாணவர்களுக்கு எந்த வித வரம்பும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது" என்றார்.