புலிகள் பாதுக்காப்பு திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு!

புதன், 30 ஜனவரி 2008 (20:28 IST)
நாடு முழுவதிலும் எட்டு வன உயிரின சரணாலயங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.600 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. இதற்கு சான்றாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அங்கு பணத்திற்காக புலிகள் கொன்று குவிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஆனால், புலிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக இன்றும் தவறான தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

இத்தனைக்கும் சரிஸ்கா 1978ஆம் ஆண்டே புலிகள் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேசிய விலங்கான புலியின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதை வன உயிரின ஆர்வலர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தனர்.

இதனையடுத்து, மத்திய அரசு புலிகள் பாதுகாப்பு (புராஜகட் டைகர்) திட்டத்தை நாடு முழுவதிலும் விரிவுபடுத்தி வருகிறது. எனினும், அறிவிப்பு வெளியாகி ஆண்டுகள் பல ஆனாலும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கியபாடில்லை என்ற நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில், 11வது ஐந்தாண்டு திட்டம் மீதான மத்திய அமைச்சரவையின் பொருளாதார கூட்டத்தொடரில் 8 இடங்களில் புலிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ.600 கோடி ஒதுக்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதரங்களை ஏற்படுத்தவும், வன உயிரினங்கள் குறிப்பாக அழிந்துவரும் புலியினங்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மலைவாழ் மக்களால் புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, பாதுக்காப்பட்ட வனப்பகுதிககு அப்பால் அவர்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வனக்குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க புலிகள் பாதுகாப்பு படைக்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. பொதுவாக புலிகளை பாதுக்காக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அனைத்துவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ள இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்