நீதித்துறை நடவடிக்கை அச்சுறுத்தலாக உள்ளது: சோம்நாத் சாட்டர்ஜி!
புதன், 30 ஜனவரி 2008 (20:21 IST)
நாட்டில் அண்மைக் காலமாகவே நீதித்துறையின் அளவுக்கு அதிகமான தீவிர நடவடிக்கைகள், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
அரசு போடும் உத்தரவுகளையோ, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்களையோ மறு ஆய்வு செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உண்டு. அதேநேரத்தில் நீதித்துறை நிர்வாக முடிவுகளை எடுக்க கூடாது என்றும், அவ்வாறு நடந்து கொள்வது அரசியல் அமைப்புசட்டத்திற்கு முரணானது என்று சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பார்க் சர்க்கஸ் மைதானத்தில் நடைப்பெற இருந்த புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் 33 -வது கொல்கத்தா புத்தகக் கண்காட்சியை, ஒரு பொது நல வழக்கு அடிப்படையில் அம்மாநில உயர் நீதிமன்றம் தடை செய்ததை சுட்டிக் காட்டிய சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்றங்களில் தொடரப்படும் பொது நல வழக்கு ஒன்று சரியானதா? அல்லது தவறானதா? என்பதை யார் தீர்மானிப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நீதித்துறை மக்களுக்கு கடமையுணர்வுடன் பணியாற்றவில்லை என்றும், நாடாளுமன்றம் மக்களுக்கு கடமையுணர்வுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதித்துறையின் தீவிரநடவடிக்கையை நிறுத்த, விழிப்பான நீதிபதிகள் தற்போது அதிக அளவில் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் தீவிரச் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பல நீதிபதிகள் அச்சம் தெரிவித்துள்ளதாகவும், அரசியல் அமைப்புச் சட்டப்படி நீதித்துறைக்கான வரையறை என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா புத்தக கண்காட்சி தொடர்பான தீர்ப்பு குறித்து மேலும் கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், புத்தக கண்காட்சி நடைபெறாமல் போனது துரதிருஷ்ட வசமானது என்று கூறியுள்ளார். ஆண்டுதோறும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது என்பதற்காக துர்கா பூஜையை கொல்கத்தாவில் நிறுத்த முடியுமா என்று சோம்நாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் சில அரசியல் கட்சிகள் சுய நல நோக்கத்துடன் நடந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் விவாதங்களின் போது இடையூறு செய்வது ஒரு முக்கியமான பிரச்சனை என்று அவர் குறிப்பிட்டார். ஊடகங்கள் நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் நடைப்பெறும் நிகழ்வுகளை நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்லும் போது, தங்களுடைய பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்தார்.
தற்போது செய்தித்தாள்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற செய்திகள் இடம் பெறுவது குறைந்து வருகின்றன. சிறப்பாக இயங்கும் ஜனநாயகத்துக்கு நான்காவது தூணான பத்திரிக்கை, ஊடகத் துறை இன்றியமையாதது. மக்களுக்கு தங்கள் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்றும், படித்த கமுதாயத்தினர் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கெடுக்க முன்வர வேண்டும். இலலாவிட்டால் இந்த நாட்டின் சிறந்த ஜனநாயக அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்று சோம்நாத் சாட்டர்ஜி எச்சரித்துள்ளார்.