அற்பமான பொது நல வழக்குத் தொடர்ந்தால் ரூ.1 லட்சம் அபராதம் : உச்ச நீதிமன்றம்!
செவ்வாய், 29 ஜனவரி 2008 (20:56 IST)
அற்பமான, பொய்யான காரணங்களுக்காக பொது நல வழக்கு தொடர்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
அண்மைக் காலமாக பொது நலன் வழக்குகள் எண்ணிக்கை நீதிமன்றங்களில் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டியிருப்பதால் நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலும் நீதிமன்றங்கள் பொது நலன் வழக்குகளை விசாரித்துதான் வந்தன.
இந்த வழக்குகள் ஒரு கட்டத்தில் எல்லாப் பிரச்சனைகளைதீர்க்கும் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் நிலை உருவானது.
நாடு முழுவதும் ஆயுள் தண்டணை பெற்ற கைதிகள் முன் கூட்டியே தங்கள் தண்டணைக் காலம் முடியும் முன்பு விடுதலை செய்யப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நெறிமுறைகளை வகுத்து தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொது நலன் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.கே.சீமா, மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் கொண்ட நீதி மன்ற அமர்வு, அண்மைக் காலமாக தொடரப்படும் பொது நலவழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் அற்பமானவையாகவும், பொய்யானதாகவும், விளம்பரம் தேடிக் கொள்ளும் வகையிலும், பணம் சம்பாதிப்பதற்காகவுமே என்ற நிலை அதிகம் காணப்படுவதாக கூறியுள்ளனர்.
95 விழுக்காடு அற்பமான வழக்குகளே!
பொது நலவழக்குகள் சமுதாயத்தில் நலிந்த நிலையில் பணம் இல்லாமல் உள்ளவர்களுக்கானது என்றும், இது தற்போது மிகவும் தொந்தரவு தருவதாக ஆகிவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
எதற்காக பொது நலவழக்கு முறை கொண்டு வரப்பட்டதோ அதனை நிறைவேற்ற, அற்பத்தனமான விஷயங்களுக்காக வழக்குகளைத் தொடர்பவர்களுக்கு அதிகப்படியான அபராதத் தொகை விதிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளதாகவும், இல்லையென்றால் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். ரூ.1 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்காவிட்டால், அற்பத்தனமான காரணங்களுக்கு மக்கள் பொது நலன் வழக்கு தொடருவதை நிறுத்த முடியாது என்றும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
பொது நலன் வழக்குகளில் சில நேர்மையான, உண்மையான வழக்குகளும் உண்டு என்று தெரிவித்த நீதிபதிகள், 95 விழுக்காடு வழக்குகள் முக்கியத்துவம் இல்லாத அற்பமான வழக்குகள் என்றும் கூறியுள்ளனர். இத்தகைய வழக்குகளால் நீதித்துறையின் காலம் வீணடிக்கப்படுவதாகவும், தாங்களும் இதுப்போன்ற பணிகளில் சிக்கியுள்ளதாகவும் , தங்களால் வழக்கமான பணிகளைக் கூட செய்ய இயலவில்லை என்றும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றங்களில் பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் இது போன்ற முக்கியத்துவம் இல்லாத வழக்குகளைத் தான் விசாரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், பெரும்பாலான பொது நலன் வழக்குகள் எல்லாம் பொய்யானவை என்றும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இந்த கருத்தை மற்றொரு நீதிபதியான ஷிமாவும் ஆமோதித்துள்ளார்.