இது குறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மும்பை, நொய்டா, குர்கான் உள்பட பல்வேறு நகரங்களில் சிறுநீரக மோசடி நடந்திருக்கிறது. எனவே இது குறித்து ம.பு.க. விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும். வருகின்ற நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின்போது தேசிய உறுப்பு மாற்று சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.
மேலும், "இத்திருத்தத்தின் மூலம் சட்ட விதிகள் எளிமையாக்கப்படும். நாட்டில் நடக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அனைத்தையும் ஒளிவு மறைவற்ற வகையில் இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பு தானம் செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் பிரச்சாரம் நடத்தப்படும்" என்றார் அன்புமணி.
குர்கானில் சிக்கிய மோசடிக் கும்பல் சுமார் 600-க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகத்தை திருடி பெரும் தொகைக்கு விற்றுள்ளது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பரவியுள்ள, மருத்துவர் ஹமீத்குமார் தலைமையிலான இந்த மோசடிக் கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஹரியானா தனிப்படை காவலர்கள் தமிழகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு விரைந்துள்ள நிலையில், இந்த வழக்கு ம.பு.கவுக்கு மாற்றப்படுவதால் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.